பத்தாம் தேதி பயணத்தைத் தொடர்கிறது ஊட்டி மலை ரயில்..

கொரானா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. படிப்படியான தளர்வுகளுக்கு பின்னர் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. சில வழித்தடங்களில் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.எனினும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் வந்து செல்ல மத்திய மாநில அரசுகள் அனுமதி அளிக்காத நிலை இருந்து வந்தது. இதன் காரணமாகப் பிரசித்திபெற்ற ஊட்டி மலை ரயிலும் இயக்கப்படாமல் முடங்கிக் கிடந்தது.

இந்நிலையில் மாநில மற்றும் மாவட்ட வருவாயைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்தலங்கள்,பூங்காக்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ பாஸ் பெற்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த மலை ரயில் மட்டும் இன்னும் இயக்கப்படாமல் இருந்து வந்தது. பல்வேறு தரப்பினரும் இந்த ரயிலை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக ரயில் பெட்டிகள் பராமரிப்பு, தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக வரும் பத்தாம் தேதி முதல் உதகை குன்னூர் இடையே மலை ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்த ரயில் உதகை குன்னூர் இடையே தினமும் நான்கு முறை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது .

7:45 குன்னூரில் இருந்து புறப்படும் ரயில் 9 மணிக்கு உதகையைச் சென்றடையும். அங்கிருந்து 9 மணிக்குப் புறப்பட்டு காலை 10.25 மணிக்கு குன்னூர் வந்தடையும். ,பகலில் 12.35 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு ஊட்டி வந்து சேரும்.பின்னர் அங்கிருந்து 2 மணிக்குப் புறப்பட்டு 3:15 குன்னூர் வந்தடையும் என்றும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

More News >>