தொடர் தோல்வி தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக சைபர் தாக்குதல்...!
சென்னை அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து கேப்டன் தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக நடைபெற்றுவரும் சைபர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஐபிஎல் 13வது சீசனில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்சுக்கு நேரம் சரியில்லை என்றே கூற வேண்டும். 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடி, 3 முறை சாம்பியனான சென்னை அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
6 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள இந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.கடைசியாக நடந்த போட்டியில் கொல்கத்தாவுடன் மிக எளிதாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த பின்னர், தோல்வியடைந்தது சென்னை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனியின் அற்புத திறமைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்ற போதிலும் அவரால் பேட்டிங்கில் சோபிக்க முடியாதது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பார்மில் இல்லாத கேதார் ஜாதவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். தோனிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் சமூக இணையதளங்களில் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக தோனியின் 5 வயது மகளைக் கூட விட்டுவைக்கவில்லை. அவருக்கு எதிராகக் கூட மிக மோசமாக சைபர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த செயலுக்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தோனி மோசமாக விளையாடியதற்காக அவரது குடும்பத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்துவது மிக மோசமான நடவடிக்கை என்று ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தோனியின் மனைவிக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.