நடிப்புக்கு திடீர் முழுக்கு போட்ட பிரபல பிக்பாஸ் நடிகை.. கடவுள் ஆணையிட்டதால் விலகல்!
பாலிவுட் நடிகைகள் தமன்னா. ரகுல் பிரீத், காஜல் அகர்வால் எனப் பல நடிகைகள் கோலிவுட்டில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தனர். அதேபோல் பாலிவுட்டிலிருந்து தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சனாகான். தம்பிக்கு எந்த ஊரு, ஆயிரம் விளக்கு படத்திலும் நடித்தார். முன்னதாக ஈ, பயணம் போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். கடைசியாக அயோக்கியா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தவிரத் தெலுங்கிலும் நடித்தார்.
இந்தியில் சல்மான் கான் உடன் ஜெய் ஹோ மற்றும் வாஹ தும் ஹோ போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது இந்தியில் டாம். டிக் அண்ட் ஹாரி 2 படத்தில் நடிக்கிறார். இது தவிர இந்தியில் பல்வேறு டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருக்கிறார்.சனாகான் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் உடன் உறவில் இருந்தார். பிறகு அவரிடம் பிரேக் அப் செய்துக் கொண்டார். 2012ம் ஆண்டு இந்தியில் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். அதில் 2வது இடத்தை பிடித்தார்.
சனாகான் பல்வேறு மொழிகளில் நடித்தாலும் எந்த மொழியிலும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. எதிர் பார்த்தளவுக்கு படங்களும் வரவில்லை. காதல் தோல்வி என்று பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொண்டார். 32 வயதில் பல இன்னல்களை அனுபவித்தார். கொரோனா ஊரடங்கில் அவரது மனம் இன்னமும் பாதிப்புக்குள்ளானது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர் மன அமைதி தேடி இறைவனைத் தொழுவதில் அதிகம் ஈடுபாடு காட்டினார். சிலரது ஆன்மிக அறிவுரைகள் அவருக்கு சினிமா மற்றும் பொழுது போக்கு துறை மீது வெறுப்பைத் தூண்டியது. இறுதியாக நடிப்பு மற்றும் பொழுது போக்கு துறைக்கு முற்றிலுமாக முழுக்கு போட முடிவு செய்தார். அதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இனி நடிக்க மாட்டேன் மனிதக்குலத்துக்குச் சேவையாற்ற உள்ளேன். இது இறைவன் எனக்கிட்ட ஆணை; எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாகான் கூறியதாவது:இன்று முதல், எனது சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறை வாழ்க்கை முறைக்கு நிரந்தரமாக விடைகொடுத்து விட்டேன், மனிதக்குலத்திற்குச் சேவை செய்வதற்கும், என் படைத்த இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்கும் நான் தீர்மானித்துள்ளேன் என்று அறிவிக்கிறேன். எனது மனதில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை மற்றவர்களும் ஏற்றுக் கொண்டு அந்த இடத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய அனைத்து சகோதர சகோதரிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன். எனது படைப்பாளரின் கட்டளைகளைப் பின்பற்றி, மனிதநேய சேவையில் என் வாழ்க்கையை செலவழிக்க வேண்டும் என்ற எனது தீர்மானத்திற்கு ஏற்ப வாழ்வதற்கான உண்மையான திறன், விடாமுயற்சி எனக்கு அளிக்கும்.
இனிமேல் எந்தவொரு சினிமா மற்றும் பொழுதுக்கு துறை வேலை தொடர்பாக என்னைக் கலந்தாலோசிக்க வேண்டாம் என்று அனைத்து சகோதர சகோதரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சனாகான் தெரிவித்திருக்கிறார். 36 வயதிலும் சில நடிகைகள் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் 32 வயதில் சனாகான் இப்படியொரு முடிவு எடுத்தது திரையுலகினரை மட்டுமல்ல ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.