ஷார்ஜாவில் கர்ஜனையோடு இருந்த ராஜஸ்தானை ஓட ஓட விரட்டிய டெல்லி!
ஐபிஎல்2020 லீக் சுற்றின் நேற்றைய (10-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஷார்ஜாவில் மோதின.
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ஆடிய 5 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகள் ஷார்ஜாவில் நடந்தது, அந்த இரு போட்டிகளையும் வென்று முத்திரை பதித்தது. எனவே நேற்றைய போட்டியில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாவது ஓவரை வீசிய ஆர்சர், தவான் விக்கெட்டை வீழ்த்தினார்.டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா, ஷிக்கர் தவான், ஷ்ரேயாஸ் ஜயர் மற்றும் ரிஷாப் பண்ட் என அனைவரும் வரிசையாக நடைகட்ட டெல்லி அணி 79-4 என்ற பரிதாப நிலையில் இருந்தது. இதனால் வெற்றி வாய்ப்பானது ராஜஸ்தானிடமே இருந்தது.
பின்னர் இணைந்த ஸ்டேய்னஸ் மற்றும் ஹெட்மயர் இருவரும் இணைந்து நிதானமாக ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஸ்டேய்னஸ் 39 ரன்களையும், ஹெட்மயர் 45 ரன்களையும் விளாசி அணிக்கு பலம் சேர்த்தனர். பலமான அணியாக வலம் வந்த டெல்லி அணி இருபது ஓவர் முடிவில் 184/8 ரன்களை சேர்த்தது.ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்சர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.மேலும் ஆல்ரவுண்டரான திவேதியா (4-0-20-1) எனச் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
ஷார்ஜாவில் 185 அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. இதற்கு முன்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 223 ரன்களை ராஜஸ்தான் சேஸ் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போட்டியில் எளிதாக வென்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ராஜஸ்தான் சார்பில் திவேதியா மற்றும் ஜெய்ஸ்வால் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்தனர்.
ஷார்ஜாவில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ராஜஸ்தானை, அந்த இடத்திலேயே வைத்துத் துவட்டி எடுத்தது டெல்லி.டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவரில் 138 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது ராஜஸ்தான் அணியால். டெல்லி அணியின் ரபாடா, ஸ்டேய்னஸ் மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனின் அசைக்க முடியாத அணியாகவும், புள்ளி பட்டியலில் முதலிடத்திலும் வலம் வருகிறது டெல்லி அணி.ஆட்டநாயகன் விருதை டெல்லி அணியின் அஷ்வின் (4-0-22-2) தட்டி சென்றார். வாழ்த்துக்கள் டெல்லி!