பட்டியலினத் தலைவியை தரையில் அமர வைத்த துணைத் தலைவர்.. கடலூர் மாவட்டக் கொடுமை..

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சிமன்றத் தலைவியைத் தரையில் உட்கார வைத்த துணைத் தலைவர் மற்றும் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. பட்டியலினத்தைச் சேர்ந்தவர். துணைத் தலைவராக மோகன்ராஜ் என்பவர் உள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 17ம் தேதி ஊராட்சி மன்ற ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால், ராஜேஸ்வரியைத் தரையில் அமர வைத்து அவமரியாதை செய்துள்ளனர். துணைத் தலைவர் மோகன்ராஜ் தான், அவரை தரையில் அமரச் சொன்னதாகவும், இதை மற்ற உறுப்பினர்களும், ஊராட்சி மன்றச் செயலாளரும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் பின்னர், ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டிருக்கும் போட்டோ, சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. இது மாவட்டம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், உயர் அதிகாரிகள் தலையிட்டு, புவனகிரி போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டனர். புவனகிரி போலீசார், ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரியிடம் புகார் பெற்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில், ராஜேஸ்வரி தவிர ஊராட்சி துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஊராட்சி செயலர் சிந்துஜா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ராஜேஸ்வரி கூறுகையில், பஞ்சாயத்துக் கூட்டத்தில் நான் தரையில்தான் உட்கார வேண்டும் என்று மோகன் சொல்வார். எல்லா முடிவுகளையும் தானே எடுப்பேன் என்றும் சொல்லுவார். நானும் இது வரை அவர்களை அனுசரித்தே சென்றேன் என்றார். இந்நிலையில், ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

More News >>