விவசாய மசோதாவை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்.. நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு

விவசாய மசோதாவை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்று கூறிய நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்யப் போலீசுக்குக் கர்நாடக மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு சமீபத்தில் விவசாய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாகப் பஞ்சாப், ராஜஸ்தான் உட்பட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் கூறுகையில், விவசாய மசோதா குறித்து விவசாயிகள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், விவசாயிகளை எந்தவிதத்திலும் இந்த மசோதா பாதிக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார். டிவிட்டரில் பல மொழிகளில் இந்த கருத்தை மோடி குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்துக்களை நடிகை கங்கனா ரனாவத் தனது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். மேலும் அவர் கூறுகையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடிய தீவிரவாதிகளைப் போலவே விவசாய மசோதாவை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். கங்கனா ரனாவத்தின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் நாயக் என்ற வழக்கறிஞர் கர்நாடக மாநிலம் தும்கூர் நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தும்கூர் போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இபிகோ 44, 108, 153, 153 ஏ மற்றும் 504 பிரிவின்படி கங்கனா ரனாவத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More News >>