எடப்பாடி தான் முதல்வர்.. ஏற்று கொண்டால் கூட்டணி.. பாஜகவுக்கு அதிமுக சவால்..

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்.. இதை ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று பாஜகவுக்கு அதிமுக கண்டிஷன் போட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவை உடைத்து, ஒட்ட வைத்து, மீண்டும் பூசல் ஏற்படுத்தி மீண்டும் ஒட்ட வைத்தது எல்லாமே மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏனெனில், சசிகலாவைக் கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் என்று ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த பின்பு, திடீரென ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். பின்னாளில், அவரைத் தூண்டி விட்டதே நான் தான்.. என்று பாஜக ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்கமாகச் சொன்னார். அதை ஓ.பி.எஸ். மறுக்கவில்லை.

அதன்பின், மீண்டும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். அப்போது துணை முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் ஏற்றுக் கொண்டார். பின்னாளில் அவர் கூறுகையில், மோடி சொல்லித்தான் நான் மீண்டும் சேர்ந்தேன். துணை முதல்வர் பதவிக்கும் ஒப்புக் கொண்டேன் என்று பதிலளித்தார். ஆக, பிரித்தது சேர்த்தது எல்லாம் பாஜக தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இப்போதும் எடப்பாடிக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்த போதும் அவரால் ஓ.பி.எஸ்சை மீற முடியவில்லை, காரணம், ஓ.பி.எஸ்.சுக்கு பின்னால் பாஜக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பாஜகவுடன் கூட்டணி சேரக் கூடாது என்று அதிமுகவுக்குள் மூத்த தலைவர் அன்வர்ராஜா உள்படப் பலர் கோரி வருகின்றனர். ஆனால், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறி வருகிறார். அது மட்டுமல்ல. அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டதற்குப் பதிலளிக்காமல் ஒதுங்குகிறார். மேலும், முதல்வர் வேட்பாளரைத் தேர்தல் நேரத்தில் சொல்வோம் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்துதான் எந்த முடிவும் எடுப்பார்கள். 11 பேர் வழிகாட்டுதல் குழு வெறும் ஆலோசனைகளை மட்டுமே வழங்கும். அதற்கான அதிகாரத்தைத் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் கட்சியில் சமநிலையில் உள்ளவர்கள்தான் கட்சியை நடத்தி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திச் செல்லும் வேளையில், இரட்டைத் தலைமை என்ற பிரச்சனை எழுப்பினார்கள். யார் முதல்வர் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.

அதனால்தான் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்திருக்கிறோம். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அவர்தான். இதை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருக்கலாம். இல்லாவிட்டால் கூட்டணியில் இருக்க முடியாது. தற்போது அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருக்கிறார்.பொன்.ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஆதாயத்திற்காகக் கட்சித் தலைமைக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில், கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

More News >>