பெண்களுக்கு எதிரான குற்றமா? கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, தடயங்களைச் சேகரித்தல் ஆகியவற்றில் விரைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களின் தகவல்களை சேகரித்துப் பாதுகாத்து வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உரியச் சட்டப்பிரிவுகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் எனவும், வழக்குகளைச் சரியான நேரத்தில் முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.