தற்கொலைக்கு முயன்ற போலீஸ் கணேசனுக்கு கைதிக்கு கஞ்சா அனுப்பியதில் தொடர்பு!

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆயுதபடை காவலர் கணேசன் சிறைச்சாலைக்கு கைதியுடன் கஞ்சாவையும் அனுப்பி வைத்ததில் தொடர்புடையவர் என தேனி எஸ்பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தேனி ஆயுதப்படையிலிருந்து இராமநாதபுரத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்ட காவலர்கள் கணேஷ், ரகு ஆகியோர் ஆயுதப்படை ஆய்வாளர் மீது புகார் தெரிவித்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயன்றனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கணேஷ் என்ற காவலர் நீலகிரி மாவட்டத்திலிருத்து கடந்த 2016 ஆண்டு அக்டோபர் மாதம் தேனிக்கு மாறுதல் வாங்கி வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி மதுரை சிறைக்கு கைதியை அடைக்க சென்ற போது, கைதியை கஞ்சாவோடு அனுமதித்த குற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், ரகு என்பவர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு சென்று, அங்கிருந்து கம்பத்தில் நடைபெற்ற ரேக்ளா ரேஸில் சீருடையுடன் கலந்துகொண்டது; பணி செய்ய மறுப்பது, அவசர பணிக்கு அழைக்கும் போது, செல்போனை அணைப்பது, காவலர் குடியிருப்பில் இருக்காமல் வெளியூரில் இருப்பது போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>