40 வயதை கடந்தால் வாத்தியார் ஆக முடியாது.. தமிழக அரசு உத்தரவு..!
ஆசிரியர் பணியில் சேர்பவர்கள் 40 வயதிற்குள் மட்டுமே சேர முடியும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டு வந்தனர் பின்னர் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக முடியும் என்ற நடைமுறை தற்போது அமலில் இருந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க இதுவரை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு இல்லாமல் இருந்து வந்தது இதன் காரணமாக 55 வயதிலும் கூட ஆசிரியராக பணிநியமனம் பெற்றவர்களும் உண்டு இந்த நிலையில் இனி 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியராக பணியில் சேர முடியாது என அரசு உத்தரவிட்டுள்ளது இதுகுறித்து அரசிதழிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் 40 வயதுக்கு மேற்பட்டோர். அவர்களுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதேபோல் இதுவரை தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வந்த வட்டார கல்வி அலுவலர்கள் நடுநிலை தொடக்கநிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் தமிழாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும் இனி வரும் காலங்களில் பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.