கிரீன் டீ, உங்கள் எடையை குறைக்குமா? உறக்கத்தை கொடுக்குமா?

கிரீன் டீ, உடல் எடையைக் குறைக்கும் பானம் என்று உலகம் முழுவதும் பலரால் அருந்தப்படுகிறது. தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அருந்தப்படுவது கிரீன் டீ தான். கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. ஊட்டச்சத்துகளும் உள்ளன. ஆகவே, அது ஆரோக்கிய பானமாகவே கருதப்படுகிறது.

கிரீன் டீ அருந்தினால் எடை ஏன் குறைகிறது?

நாம் உண்ணும் உணவையும் அருந்தும் பானங்களையும் உடல் தனக்குப் பயன்படும் ஆற்றலாக மாற்றும் செயல்பாடு வளர்சிதை மாற்றம் (மெட்டாபாலிஸம்) எனப்படுகிறது. கிரீன் டீயில் கேடேசின் என்ற ஃப்ளவனாய்டு உள்ளது. ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகச் செயல்படும் கேடேசின், வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது.

தொடர்ந்த உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவுப் பழக்கம், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவதுடன் கிரீன் டீயும் பருகினால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று குவளை (தம்ளர்) கிரீன் டீ அருந்தலாம்.

ஆழ்ந்த உறக்கம்

இரவில் டீ அருந்துவது தூக்கத்தைக் கெடுக்கும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு இரவில் கிரீன் டீ பருகுவதை அநேகர் தவிர்த்துவிடுகிறார்கள். அறிவியல் ஆதாரங்கள் இல்லையென்றாலும் உணவியல் ஆலோசகர்களின் கருத்துப்படி, கிரீன் டீ இரவில் ஆழ்ந்த உறக்கத்திற்குக் காரணமாகும் உணவுப் பொருள்களில் ஒன்றாகும்.

கிரீன் டீயில் இருக்கும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் கூட்டுப்பொருள்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; மன ஆரோக்கியத்துக்கும் நல்லதாகும். கிரீன் டீயில் காணப்படும் தியானைன் என்னும் கூட்டுப்பொருள், நரம்புகளுக்கு இளைப்பாறுதலை அளிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதோடு பல்வேறு காரணங்களால் உற்சாகமடையும் நியூரான்களையும் ஆற்றுகிறது.

கிரீன் டீயில் காஃபைன் குறைந்த அளவே காணப்படுகிறது. அது அசதியைக் குறைக்கிறது. அதே சமயம் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. உறங்கச் செல்லும் முன்பு கிரீன் டீ பருகுவது ஆழ்ந்து உறக்கத்தைத் தரும்.

கிரீன் டீ - சரியான முறை

தண்ணீரை அதிக அளவில் சூடாக்கினால் அது கிரீன் டீயில் உள்ள கேடேசின்களை சேதப்படுத்தும். ஆகவே, முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து பின்னர் 10 நிமிடங்கள் ஆற விடவும். அதன் பின்னர் கிரீன் டீ இலைகளைப் போட்டு ஒரு நிமிடம் மட்டும் சூடாக்கி, சிரீன் டீயை வடிகட்டினால் நல்ல சுவையான, சத்துள்ள கிரீன் டீ கிடைக்கும்.

More News >>