சபரிமலையில் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதி... ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்...!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும்16ம் தேதி முதல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் உட்பட அனைத்துக் கோவில்களும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் கொரோனா நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்குக் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் பிரசித்தி பெற்ற மண்டலக் கால பூஜைகள் தொடங்குகின்றன. அப்போது பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மண்டலக் கால பூஜைகளுக்கு நடை திறக்கப்படும் நவம்பர் 16ம் தேதி முதல் தினமும் 1,000 பக்தர்களை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 2,000 பக்தர்களை அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் மண்டலக் கால பூஜைக்குப் பக்தர்களை அனுமதிப்பதற்கு முன்னோடியாக அக்டோபர் 16ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்கு நடை திறக்கும்போது சோதனை அடிப்படையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது.இதையடுத்து வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களிடம் கூறும்போது, வரும் 16ம் தேதி முதல் சபரிமலையில் தினமும் 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும். வடசேரிக்கரை மற்றும் எருமேலி பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் இம்முறை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்ற அனைத்து பாதைகளும் மூடப்படும். பம்பையில் குளிப்பதற்குப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படும். பக்தர்கள் மட்டுமல்லாமல் போலீசார், அரசு அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை நடத்தினால் மட்டுமே சபரிமலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

More News >>