டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு... பார்லே நிறுவனம் அதிரடி!
டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்த 3 டிவி சேனல்களுக்கும் விளம்பரம் கொடுக்க மாட்டோம் என்று பார்லே நிறுவனம் அறிவித்துள்ளது.டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என அழைக்கப்படும் டிஆர்பி ரேட்டிங்கை பொருத்துத் தான் டிவி சேனல்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன. எந்த டிவி சேனலுக்கு ரேட்டிங் கூடுதலாக இருக்கிறதோ அந்த சேனலைத் தான் விளம்பரதாரர்கள் நோட்டமிடுவார்கள். ரேட்டிங் கிடைப்பதற்காக சில சேனல்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக நீண்ட நாட்களாகவே புகார் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல இந்தி செய்தி சேனலான அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி, ஃபேக்ட் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகிய 3 டிவி சேனல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாகக் கூறி மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து இந்த 3 டிவி சேனல்களுக்கும் விளம்பரம் கொடுக்கமாட்டோம் என்று ஏற்கனவே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் பார்லே பிஸ்கட் நிறுவனமும் ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்களுக்கும் விளம்பரம் கொடுக்க மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பார்லே நிறுவனத்தின் மூத்த அதிகாரி கிருஷ்ணராவ் புத்தா கூறுகையில், டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்த 3 சேனல்களுக்கும் விளம்பரம் கொடுப்பதை நிறுத்தி வைக்கத் தீர்மானித்துள்ளோம்.
இந்த 3 சேனல்களையும் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம். வெறுப்பு பிரச்சாரம் நடத்திவரும் இந்த சேனல்களுக்கு விளம்பரங்களை வழங்கக் கட்டுப்பாடு கொண்டு வருவது தொடர்பாக மற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து ஆலோசித்து வருகிறோம். இனியாவது இந்த டிவி சேனல்கள் தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்று கூறினார்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக இந்த 3 டிவி சேனல்களுக்கும் மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் ரிபப்ளிக் டிவி சார்பில் யாரும் ஆஜராகவில்லை. மும்பை போலீசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதில் முடிவு ஏற்படும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூறி ரிபப்ளிக் டிவி சார்பில் மும்பை போலீசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.