பொளந்து கட்டிய பெங்களூர்!செல்ஃப் எடுக்காத சென்னை!
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (11-10-2020) இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பெங்களூர் அணியின் பின்ச் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினாலும் 2 ரன்களில் தீபக் சஹர் ஓவரில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் தொடக்க இணையான பல்லிக்கல் உடன் இணைந்த கோலி நேற்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு தனது குருதாண்டவத்தை ஆடினார்.
குருவுடன் இணைந்த பல்லிக்கல்லும் நிதானமாக ஆடி 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனாலும் ஒருபுறம் அதிரடியாக தனது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 52 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சர் என 90 ரன்களை விளாசி கேப்டன் இன்னிங்க்ஸை இன்றும் தொடர்ந்தார்.
பெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் 169 ரன்களை விளாசியது. சென்னை அணியின் சார்பாக ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் மற்றும் தீபக் சஹர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இருபது ஓவர் முடிவில் 170 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பெங்களூர் அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர். சென்னை அணியின் தொடக்க இணையாக களமிறங்கிய பிளசில் மற்றும் வாட்சன் என இருவரையும் சுந்தர் வீழ்த்த சென்னையின் தோல்வி ஊர்ஜிதமானது.
இருந்தாலும் ராயுடு மற்றும் ஜெகதீசன் இருவரும் போராடினர். ஆனால் பெங்களூர் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாது சென்னை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்த 132 ரன்களில் சுரண்டது சென்னை அணி.
பெங்களூர் அணி சார்பில் நேற்று களமிறங்கிய கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, சென்னை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
நேற்றைய போட்டியில் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.