இனி மதுரை.. கோவைக்கு பறக்கலாம்.
வரும் 13ம் தேதி முதல் மதுரையிலிருந்து கோவைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கோவையில் வசித்து வருகிறார்கள். எனவே மதுரை- கோவை இடையே இரு மார்க்கத்திலும் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.
ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கோவைக்கும் விமான போக்குவரத்தை வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, கோவையில் இருந்து மதுரைக்கு தனியாக விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 70 பேர் பயணம் செய்யும் வசதியுடன் கூடிய (9 I 573) இந்த விமானம் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
பெங்களூருவிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 7.50 மணிக்கு வந்து சேரும். மதுரையிலிருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.10 மணிக்கு கோவை வந்து சேரும். கோவையில் இருந்து 9.35 க்கு புறப்பட்டு 10.35 க்கு பெங்களூரு சென்றடையும். . மதுரை-கோவை இடையே விமான போக்குவரத்து தொடங்குவதற்கு பொதுமக்களும், வர்த்தகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.