திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?
திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் நேற்று இணைந்தார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டையை குறித்துத் தான் அவரது ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 7 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரிஷ்யம் படத்தின் 2வது பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முதல் பாகத்தில் மோகன்லாலுடன் நடிகை மீனா, சித்திக், அன்சிபா ஹசன், எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் முதல் பாகம் படம்பிடிக்கப்பட்ட அதே தொடுபுழா பகுதியில் தொடங்கியது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகை மீனா கடந்த சில தினங்களுக்கு சென்னையிலிருந்து கொச்சி புறப்பட்டு சென்றார். கடந்த சில தினங்களாக மோகன்லால், மீனா தவிர மற்ற நடிகர்கள் கலந்து கொண்ட காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு குழுவினருடன் மோகன்லாலும் இணைந்தார். அவர் படப்பிடிப்பிற்கு காரிலிருந்து இறங்கி வருவதை படப்பிடிப்பு குழுவை சேர்ந்த யாரோ ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக இணையதளங்களில் பகிர்ந்தார். பின்னணி இசையுடன் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்புக்கு வரும் போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையைப் பற்றித்தான் மோகன்லால் ரசிகர்கள் இப்போது பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த சட்டை என்ன பிராண்ட், என்ன விலை இருக்கும் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இறுதியில் அதற்கான விடையையும் அவர்களே கண்டுபிடித்து விட்டனர். 'பால் அன்ட் ஷார்க்' என்ற இத்தாலி பிராண்ட் ஆன அந்த சட்டையின் விலை 250 யூரோ ஆகும். அதாவது ₹21,579. சில ஆன்லைன் ஸ்டோர்களிலும் தற்போது இந்த சட்டை கிடைக்கிறது. ஆன்லைனில் இந்த சட்டை விலை 18 ஆயிரத்தில் இருந்து 20,000 ரூபாய் வரை உள்ளது. இதற்கிடையே படப்பிடிப்புக்கு மோகன்லால் வந்தது ஒருபுறம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. காரிலிருந்து இறங்கும் போது முக கவசத்தை அவர் கழட்டினார்.மேலும் தனது கையால் முகத்தை துடைத்துக் கொண்டே சென்றார். பொது இடத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்று அரசு கூறும் போது மோகன்லால் எப்படி முக கவசத்தை அகற்றலாம் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.