பள்ளிக்கூடத்தை திறக்காதீங்க.. முன்னாள் முதல்வர்கள் கதறல்.
கர்நாடகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என முதல்வர்கள் இரண்டு பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரானா ஊரடங்கு பிறகு நாடு முழுவதும் பல்வேறு கட்ட தலர்விகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இதில் கல்வி நிலையங்களை திறப்பது குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. அந்தந்த மாநில அரசுகளே இது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு கையை நீட்டி விட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வர் களான சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது அவ்வளவு நல்லதல்ல எனவே பள்ளிகளை திறக்க வேண்டாம் என அம்மாநில அரசை வலியுறுத்தி உள்ளனர். கொரானா பரவல் இன்னும் முடிவுக்கு வராத சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது. பெற்றோர்களும் பள்ளி திறப்பதற்கு எதிராகவே உள்ளனர். ஒரு சிலரின் நிர்பந்தத்துக்காக மாநில அரசு அடிபணியக் கூடாது. பள்ளிகள் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மாணவர்களின் உயிரோடு விளையாட கூடாது. மாநிலத்தில் இதுவரை 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 ஆயிரம் பேரும் 11 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 47 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தச் சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது அரசின் சிந்தனையில் இருக்கும் கடைசி கட்ட விஷயம். பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று அரசுக்கு எந்த அவசரமும் நிர்பந்தமும் கிடையாது பள்ளிகளை திறப்பதை மாநில அரசு தனது கவுரமான விஷயமாக பார்க்கவில்லை. இதுதொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்தி வருபவர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்களுக்கு மாணவர்களின் நலன் தான் முக்கியம் அவர்களுக்கு தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வதே எங்களது கடமை. பல முறை முதல்வர் எடியூரப்பா மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகரன் ஆகியோரும் பள்ளிகள் திறக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். எனவே வதந்திகளை பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.