பண்டிகைக் காலம் நெருங்குகிறது கொரோனா பரவ அதிக வாய்ப்பு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை.
தீபாவளி, நவராத்திரி உட்பட பண்டிகை காலம் நெருங்குகிறது. எனவே தற்போதைய சூழலில் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் வேகம் அதிக மாற்றமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 70.5 லட்சம் பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.08 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 74,383 பேருக்கு நோய் பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் 918 பேர் மரணமடைந்தனர். நோய் பரவல் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்ற போதிலும் கொரோனா நிபந்தனைகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி, நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைகள் வர உள்ளன. இதையொட்டி பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்கள் உட்பட பொது இடங்களில் கூட அதிக வாய்ப்புக்கள் இருப்பதால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறியிருப்பது: நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளன. இந்த பண்டிகை காலங்களில் நாம் கொரோனா நிபந்தனைகளை பின்பற்றாவிட்டால் நோய் பரவ அதிக வாய்ப்பு உண்டு. அது மேலும் பிரச்சனையை அதிகரிக்கும். பண்டிகைகளைக் கொண்டாடும் போது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வேண்டும் என்று எந்த மதத் தலைவரும் விரும்புவதில்லை.
பிரார்த்தனை செய்வதற்கு வழிபாட்டுத் தலங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்று எந்த தெய்வமும் கூறவில்லை. தற்போதைய சூழலில் விழாக்களையும், பண்டிகைகளையும் குடும்பத்தினருடன் சேர்ந்து வீடுகளில் வைத்து கொண்டாடுவது தான் நல்லது. வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமென விரும்புவர்கள் சமூக அகலத்தை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சர் என்ற நிலையில் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது என்னுடைய கடமையாகும் என்று கூறினார்.