வாழைக்காய் தோல் சட்னி: இதில் இருக்கும் சத்துகள் எவை தெரியுமா?
வாழைப்பழத் தோல் வழுக்கிவிடும் என்று மட்டுமே நமக்குத் தெரியும். பலர் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். சிலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு வாழைப்பழத் தோலை சாப்பிடக் கொடுப்பார்கள்.வாழைக்காயைக் கொண்டு கூட்டு அல்லது பஜ்ஜி போன்றவை செய்யும்போது தோலை சீவி குப்பையில் போடுகிறோம். வாழைக்காயின் தோலில் நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் செய்யும் ஊட்டச்சத்துகள் உள்ளன. அதில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு நல்லது. வீணாகப் போகும் வாழைக்காய் தோலை பயன்படுத்தி சுவையான சட்னி செய்யலாம். அதை மற்ற சட்னிகளை சாப்பிடுவதுபோல உணவுகளுக்கு துணையாக தொட்டு சாப்பிடலாம்.
தேவையானவை: சீவப்பட்ட வாழைக்காய் தோல், உப்பு, வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கருஞ்சீரகம், எண்ணெய்
செய்முறை: வாழைக்காய் தோலை நீரில் கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் உப்பு, வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். எண்ணெயை (சிலர் கடுகு எண்ணெய் பயன்படுத்துவர்) சூடாக்கி, கருஞ்சீரகம் மற்றும் வற்றலை (காய்ந்த மிளகாய்) அதில் வதக்கவும். அதனுடன் அரைத்த வாழைக்காய் தோலை சேர்த்து சில நிமிடங்கள் அடுப்பில் விடவும். இப்போது வாழைக்காய் தோல் சட்னி தயாராகிவிட்டது. அதை சிற்றுண்டிகளுடன் சேர்த்து உண்ணலாம்.