சீன வைரஸ் நோயை நான் வென்று விட்டேன்.. அதிபர் டிரம்ப் பேச்சு..

பயங்கரமான சீன வைரஸ் நோயை நான் வென்று விட்டேன். இப்போது நான் நன்றாக உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. அந்நாட்டில் 2 லட்சம் பேருக்கு மேல் இந்நோயால் பலியாகி விட்டனர்.

இந்த வைரஸ் நோயைச் சீனா திட்டமிட்டுப் பரப்பி விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். சீனாவுக்கு உடந்தையாக உலக சுகாதார நிறுவனம் இருந்து விட்டதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில், டிரம்ப்பின் ஆலோசகர் ஹோப்ஸ் ஹிக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் இருவருக்குமே கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது. இதன்பின், வெள்ளை மாளிகை டாக்டர்களின் ஆலோசனையை ஏற்று டிரம்ப், ராணுவ மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையில் இருக்கும் போது டிரம்ப் திடீரென காரில் ஏறி, மருத்துவமனைக்கு வெளியே வந்து அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து கையை அசைத்து விட்டுச் சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த 2 நாட்களில் அவர் குணம் அடைந்து விட்டதால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், டிரம்ப் நேற்று(அக்.11) கூறியதாவது:நான், பயங்கரமான சீன வைரஸ் நோயை முழுவதுமாக வென்று விட்டேன். அமெரிக்க அதிபர் இப்போது நன்றாக உள்ளார். எதற்கு எதிராகவும் போராடத் தயாராக இருக்கிறார். மிகச் சிறந்த பரிசோதனைகளைச் செய்து கொண்டேன். அதில் எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது என்று தெரியவந்திருக்கிறது. எனவே, யாரும் கவலைப்பட வேண்டாம்.இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனாவில் இருந்து டிரம்ப் குணமாகி விட்டாலும், அதிபர் தேர்தலுக்கான விவாதத்தைக் காணொலி காட்சி மூலம் நடத்துவதாக அதற்கான ஆணையம் கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விவாதத்தை டிரம்ப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>