தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற சதி திட்டம் - நடிகர் அம்பலப்படுத்திய பரபரப்பு தகவல்கள்
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜக காலூன்ற புதிய சதி திட்டத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. அதற்கு ரூ. 4800 கோடியை ஒதுக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பாஜக ஆதரவாளரும், நடிகருமான ஆந்திராவை சேர்ந்த சிவாஜி, செய்தியாளர்கள் சந்திப்பை அவசரமாக கூட்டினார். அப்போது பேசிய அவர், பாஜக பெயரை குறிப்பிடாமல் அதன் செயல்திட்டங்களையும் விளக்கியுள்ளார். இது தென்மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வியாழனன்று தெலுங்கு நடிகர் சிவாஜி விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியதாவது:
2019ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும், சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையும் மனதில் வைத்து ஒரு தேசிய கட்சி ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகியா மாநிலங்களில் பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த ஒட்டு மொத்த திட்டத்திற்கு ‘ஆபரேஷன் திராவிடம்’ என பெயர் சூட்டியுள்ளது.
தமிழகம், கேரளாவுக்கு ‘ஆபரேஷன் ராவணா’, ஆந்திரா, தெலங்கானாவுக்கு ‘ஆபரேஷன் கருடா’ கர்நாடகத்துக்கு ‘ஆபரேஷன் குமார்’ என பெயர் சூட்டி செயல்படுத்தி வருகிறது. இந்த அரசியல் ஆபரேஷன்களை நடத்த ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ எனப்படும் ரகசிய உளவாளிகளை அந்தந்த கட்சிக்குள் ஊடுருவச் செய்திருக்கிறது.
குறிப்பாக நான்கு மாநிலங்களில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இந்த ஸ்லீப்பர் செல்கள் வேலையை துவக்கி செய்து வருகிறன்றன. இதன் காரணமாகவே அந்த மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளில் உட்பூசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கூடிய விரைவில் அந்த கட்சிகளில் இருந்து பலர் வெளியேறுவர். பலர் புதிய கட்சிகளை தொடங்குவார்கள்.
அவர்கள் பின்னாளில் அந்த தேசிய கட்சியுடன் ஐக்கியமாகியும் விடுவார்கள். (இதே பாணிதான் நாகாலாந்து, மேகாலாயாவில் நடைபெற்றது) மக்களைக் குழப்பும் பல தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவார்கள். இதற்கென தனி அமைப்பையே அந்த தேசிய கட்சி உருவாக்கி உள்ளது.
மேலும் அரசியல் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரூ.4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கி செலவிட்டு வருகிறது. இதில் சிலர் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சக்கர வியூகத்தில் விழுந்து பலியாக உள்ளனர். குறிப்பாக ஆந்திராவில் பெரும் கலவரம் நடக்க உள்ளது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் குண்டூர் அல்லது ஹைதராபாத்தில் தாக்கப்படுவார். இதற்காக ஒடிஷா, பீஹார் மாநிலங்களில் இருந்து கூலிப்படை வரவழைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை அரங்கேற்றிய பின்னர், ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பணிகள் நடைபெறும். இதனை காரணமாக கொண்டு வரும் செப்டம்பரில் தற்போதைய ஆந்திர ஆட்சி கலைக்கப்படும். முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் பதிவாகும். ஒரு கட்டத்தில் சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவிடப்படும். இதன் மூலம் தெலுங்கு தேச கட்சிக்கு அவப்பெயரை உருவாக்க அந்த தேசிய கட்சி திட்டம் தீட்டியுள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடுவை பொருளாதார ரீதியாகவும் நிலை குலைய செய்யவும் திட்டம் தீட்டியுள்ளது.
ஆந்திராவிற்கு சந்திரபாபு நாயுடு கேட்டவுடன் சிறப்பு நிதியை வழங்காமால், அதற்கு மாறாக புதிதாக கட்சி தொடங்கி, தேர்தலை சந்திக்காத ஒரு கட்சி தலைவரையும் தேசிய கட்சி விட்டு வைக்க வில்லை. அவர் விரைவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார்.
இதற்கு அடிபணிந்தது போல், தேசிய கட்சி ஒரு சிறப்பு நிதியை ஆந்திராவுக்கு வழங்கும். இவரை உபயோகப்படுத்தி கொண்டு அடுத்த தேர்தலில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பேரமும் பேசப்பட்டுள்ளது. இறுதியில், சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த பின்னர், தற்போதைய எதிர்க்கட்சி, புதிய கட்சியுடன் இணைந்து தனது கட்சியை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை ஆந்திராவின் முதல்வராக நியமிக்கும் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
கடந்த 6 மாதங்களாக நான் டெல்லியில் தங்கி இருந்தபோது, அந்த ஸ்லீப்பர் செல்லில் உள்ளவர்களில் ஒருவர் இந்த தகவல்களை எனக்கு தெரிவித்தார். ஆனால், இப்போதும்கூட நான் இதனை தெரிவிக்காவிட்டால், ஆந்திர மக்கள் என்னை மன்னிக்கமாட்டார்கள். ஆந்திரா மட்டுமின்றி, தென் மாநிலங்களில் நம்பக்கூட முடியாத பல செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அந்த தேசிய கட்சி கீழ்த்தரமான செயல்களில் கூட ஈடுபட தயங்காது. பொதுமக்கள் ‘அந்த’ தேசிய கட்சியின் சதியில் விழாமல் விழித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கடந்த சில தினங்களாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், நடிகர் சிவாஜியின் குற்றச்சாட்டுகளும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com