அமெரிக்க அதிபருக்கு கோவில் கட்டிய வாலிபர் திடீர் மரணம். என்ன காரணம்?
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தனது வீட்டுக்கு அருகே கோவில் கட்டிய தெலங்கானா வாலிபர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான் மரணத்திற்குக் காரணம் என்று டாக்டர்கள் கூறினர்.சினிமா நடிகர், நடிகைகளுக்கும், உள்ளூர் தலைவர்களுக்கும் சிலர் கோவில் கட்டி வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் வெளிநாட்டுத் தலைவர், அதுவும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தார்.
தெலங்கானாவைச் சேர்ந்த புசா கிருஷ்ணா என்ற 38 வயதான இந்த வாலிபர் டிரம்பின் தீவிர ரசிகர் ஆவார். தன்னுடைய நண்பர்களிடம் ஆனாலும் சரி, உறவினர்களிடம் ஆனாலும் சரி எந்த நேரமும் டிரம்பை குறித்துத் தான் இவர் வாய் வலிக்காமல் பேசிக்கொண்டிருப்பார். இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த அனைவரும் இந்த வாலிபரை டிரம்ப் கிருஷ்ணா என்றுதான் செல்லமாக அழைத்து வந்தனர்.
டிரம்பின் மீது இருந்த அளவு கடந்த பாசமும், அன்பும் அதிகரித்ததைத் தொடர்ந்து கிருஷ்ணா தனது வீட்டுக்கு அருகே டிரம்புக்கு கோவில் கட்டி பூஜைகளை நடத்தி வழிபடத் துவங்கினார். இதன் பிறகு தான் இவர் தேசிய அளவில் பிரபலம் அடையத் தொடங்கினார். கடந்த 4 வருடங்களுக்கு முன் தன்னுடைய கனவில் டிரம்ப் வந்தால் தான் கோவிலைக் கட்டியதாக இவர் கூறுகிறார். தினமும் காலையிலும், மாலையிலும் இவர் பூஜை நடத்தி வழிபட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் டிரம்பின் படம் போட்ட உடைகளை மட்டுமே அணிவது இவர் வழக்கம். இது தவிர இவரது வீட்டிலும் எங்குப் பார்த்தாலும் டிரம்பின் படம் தான் இருக்கும்.
இந்நிலையில் நேற்று இவர் திடீரென தனது வீட்டில் வைத்துச் சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மாரடைப்பு தான் மரணத்திற்குக் காரணம் எனக் கூறினர். டிரம்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அறிந்ததிலிருந்தே கிருஷ்ணா மிகவும் கவலையுடனும், அதிர்ச்சியுடனும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது டிரம்பை சந்திக்க வேண்டுமென இவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறிவந்தார். ஆனால் கடைசிவரை கிருஷ்ணாவால் அவருடைய கடவுளான டிரம்பை சந்திக்கவே முடியவில்லை. அடுத்த தேர்தலிலும் டிரம்ப் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று இவர் உறுதியாக நம்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.