செல்போன்கள், பிளாஸ்டிக், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை தாக்குப் பிடிக்குமாம்.

செல்போன்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்களில் எத்தனை நாட்கள் உயிர் வாழும், அது எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது என்பது குறித்த விவரங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இரும்பு, பிளாஸ்டிக், பேப்பர்கள் உட்பட பொருட்களில் இந்த வைரஸ் பல மணி நேரம் உயிருடன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வைரஸ் உள்ள இடத்தை நாம் கைகளால் தொட்டு, அந்த கையை வாயிலோ, மூக்கிலோ வைக்கும் போது தான் இந்த வைரஸ் நம்முடைய உடலுக்குள் நுழைகிறது.

எனவே தான் முக கவசம் அணிவதும், அடிக்கடி கைகளை சோப் அல்லது சானிடைசர் பயன்படுத்தி கழுவுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்பது குறித்த ஒரு புதிய ஆய்வு ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் செல்போன்களின் ஸ்கிரீன் கிளாஸ், ஸ்டீல், பிளாஸ்டிக் மற்றும் ரூபாய் நோட்டுகளின் மேற்பரப்பில் 28 நாட்கள் வரை இந்த வைரஸ் உயிருடன் இருக்கும் என தெரியவந்ததுள்ளது. மேற்பரப்புகளில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை இந்த வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும். வெப்பநிலை 30 டிகிரியாக உயர்ந்தால் 7 நாட்களும், 40 டிகிரியாக உயர்ந்தால் 24 மணி நேரமும் மட்டுமே இதன் ஆயுள் இருக்கும்.

காட்டன் போன்ற உடைகளில் இந்த வைரஸ் அதற்கு சாதகமான தட்ப வெப்ப நிலையில் 15 நாட்கள் வரை உயிர்வாழும். வெப்பம் அதிகரிக்கும் போது இதன் ஆயுள் 16 மணி நேரமாக குறையும். இதற்கு முன் நடந்த ஆய்வுகளில் கொரோனா வைரஸ் இவ்வளவு நீண்ட நேரம் உயிர்வாழும் என கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நீண்ட நேரம் உயிர் வாழும் வைரசால் உடனடியாக பாதிப்பு ஏற்படும் என கூற முடியாது. ஆனால் கவனக்குறைவாக இருந்தால் நோய் பரவ வாய்ப்பு உண்டு. வைரசை தொட்ட பின்னர் கண்களிலோ, மூக்கிலோ அல்லது வாயிலோ கைகளைக் கொண்டு சென்றால் நோய் பரவ அதிக வாய்ப்பு உண்டு என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>