கொரோனா பாதித்த கர்ப்பிணி இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் மரணமடைந்த சோகம்.

கேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

கேரளாவில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது. அன்று இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோய் பரவல் அதிகரித்து வருவதால் கேரள அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஏதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 8 மாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடக்கொச்சி பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ராஜலட்சுமி (28). திருமணமாகி இவர்களுக்கு 8 வருடங்களாக குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் ராஜலட்சுமி கர்ப்பிணியானார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ராஜலட்சுமி கொச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடத்தப்பட்டது. அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கும், ராஜலட்சுமிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ராஜலட்சுமி நேற்று மரணமடைந்தார். இவரது உடல் இன்று கொச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே தீவிர சிகிச்சை காரணமாக கொரோனாவிலிருந்து குழந்தை மீண்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

More News >>