தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன்.. குஷ்பு அறிவிப்பு..

தமிழகத்தில் பாஜக வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்று அந்தக் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். அதனால் அவருக்கு எதிராக பாஜகவினரும் கடுமையாகப் பதிவுகளைப் போட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்புவின் நிலையில் மாற்றம் தெரிந்தது. தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டார். அதன்பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட போது, அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சூழலில் குஷ்பு நேற்றிரவு 9.30 மணிக்கு டெல்லிக்குச் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள், பாஜகவில் சேரப் போகிறீர்களா? என்று கேட்டர். அதற்கு அவர், “கருத்துச் சொல்ல விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவருடன் கணவர் சுந்தரும் சென்றார். அவர் பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டதும், அவரை செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கி காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக குஷ்பு, சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை மீடியாக்களுக்கு அளித்தார்.

இதன் பின்னர், இன்று(அக்.12) பகல் 12.30 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு குஷ்பு வந்தார். அங்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். குஷ்புவுக்கு பாஜக சால்வை அணிவித்து, உறுப்பினர் சேர்க்கை படிவமும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை வரவேற்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசினார். அப்போது, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாஜகவில் சேருவதாகவும், அந்த வரிசையில் குஷ்புவும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

குஷ்பு பேசுகையில், பிரதமர் நரேந்திரமோடிஜி நாட்டை சரியான திசைக்குக் கொண்டு செல்கிறார். அதை உணர்ந்து பாஜகவில் சேர்ந்துள்ளேன். எனக்கு அளிக்கப்படும் பொறுப்பில் என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுவேன். தமிழகத்தில் பாஜக வெற்றிக்காகப் பாடுபடுவேன் என்று கூறினார்.

More News >>