கமல் கட்சி யாருடன் கூட்டணி.. 16ல் ம.நீ.ம. செயற்குழு கூட்டம்..

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது, எப்படிச் செயல்படுவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 16ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூடுகிறது.நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, மூன்றரை சதவீத வாக்குகளைப் பெற்றது. மேலும், தென்சென்னை உள்படப் பல தொகுதிகளில் சராசரியாக ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்றது.

மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் இக்கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெறுமா என்ற பேச்சு ஒரு சமயத்தில் ஏற்பட்டது. அதாவது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய பேரணிக்கு ம.நீ.ம. கட்சிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று அந்த பேரணியில் பங்கேற்பதாகக் கமல் அறிவித்தார். ஆனால், கடைசியில் பேரணியில் பங்கேற்காமல் வெளியூர் சென்று விட்டார். ம.நீ.ம. கட்சியினரும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், வரும் தேர்தலில் எந்த கூட்டணியில் கமல் கட்சி இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது பற்றி விவாதிப்பதற்காக அக்கட்சியின் செயற்குழு கூடுகிறது. அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் அக்டோபர் 16 அன்று காலை 11 மணியளவில் சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஜிஆர்டி நட்சத்திர ஓட்டலில் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் வரப்போகும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்தான கட்சியின் செயற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்படவிருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, கமல் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன. வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும். ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையினைப் பெறத் தெரிந்தால்,நாமே தீர்வு.

இவ்வாறு கூறியிருக்கிறார்.

More News >>