இனி ரயில்களில் எல்லா கோச்களுக்கும் குளு .. குளு .. தான்...
இந்தியாவில் இனி மணிக்கு, 130 கி.மீ.,க்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படும் நீண்ட தூர மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், இனி, அனைத்து பெட்டிகளும், 'ஏசி' வசதி கொண்டதாகவே இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர், டி.ஜே. நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :தற்போது, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அதிகபட்சமாக, மணிக்கு, 80 முதல் 110 கி.மீ. என்ற வேகத்தில் தான் இயக்கப்படுகின்றன. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற அதிவேக ரயில்கள் மட்டும் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. என்ற , வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களை இனி 130 - 160 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில், ரயில் பாதைகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி மணிக்கு, 130 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்கப்படும் எல்லா ரயில்களிலும் அனைத்து பெட்டிகளும், 'ஏசி' கோச்சுகளாகவே இருக்கும். தொழில்நுட்ப ரீதியில் இப்படி இருப்பது அவசியமாகிறது.எனவே இனி மணிக்கு 130 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், அனைத்து பெட்டிகளும், 'ஏசி' வசதி உடையதாகவே இருக்கும்.
கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த புதிய வகை ஏசி பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு, 100 பெட்டிகளும், அடுத்த ஆண்டு 200 பெட்டிகளும் தயாரிக்கத் திட்டமிடப்பட்டு ஆதற்கான பணிகள் நடந்து வருகின்றன.தற்போது உள்ள துாங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் , 72 பேர் மட்டுமே பயணிக்க முடியும். புதிதாகத் தயாராகும் 'ஏசி' பெட்டியில், 83 பேர் பயணிக்க முடியும். அதிவேக ரயில்களில், அனைத்து பெட்டிகளும், 'ஏசி' வசதி உடையதாக இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருக்காது. படுக்கை வசதி கட்டணத்தை விடச் சற்று அதிகமாகவும் அதே சமயம் ஏ. சி. கோச்சுகளை விட குறைந்த அளவிலும் கட்டணம் இருக்கும். இதன் மூலம் பயணிகளுக்குச் சிறந்த வசதிகள் கிடைப்பதுடன், பயண நேரம் குறையும் எனவும் டி.ஜே நாராயணன் தெரிவித்தார்.