நமது நாட்டில் எட்டு கடற்கரைகளுக்கு கிடைத்த உலகின் சிறந்த கடற்கரை நீலக் கொடி விருது..!

சர்வதேச சுற்றுச்சூழல் உலகில் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான நீலக்கொடி விருது நமது நாட்டில் எட்டு கடற்கரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூய்மையான, பாதுகாப்பான, விரும்பத்தக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்கரைகள், என்ற அடிப்படையில் சர்வதேச 'நீலக் கொடி' (Blue Flag) சான்றிதழைப் பெற்றுள்ளன. நீலக் கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரைகள் உலகின் தூய்மையான கடற்கரைகளாகச் சர்வதேச அளவில் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றன.

சுற்றுச்சூழல், கடல் நீரின் தரம், பாதுகாப்பு, சேவைகள் மற்றும் அணுகல் தரநிலைகள் உள்ளிட்ட 33 கடுமையான அளவுகோல்களைக் கடற்கரைகள் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த சான்றிதழ் கிடைக்க வாய்ப்பு உண்டு.

உலகில் இதுவரை 50 நாடுகளைச் சேர்ந்த 4, 600 க்கும் மேற்பட்ட கடற்கரைகள், மெரினாக்கள் நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ளன. உலகிலேயே ஸ்பெயின் நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான நீலக் கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரைகள் உள்ளன.தற்போது நமது நாட்டில் குஜராத்தின் ஷிவ்ராஜ்புர், கர்நாடகாவின் கசர்கோட் மற்றும் படுபித்ரி கடற்கரைகள், கேரளாவின் கடற்கரை, ஆந்திரப்பிரதேசத்தின் ருஷிகொண்டா கடற்கரை, ஒடிசாவின் கோல்டன் கடற்கரை (பூரி) யூனியன் பிரதேசங்களான டையூவின் கோக்லா கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ராதா நகர் கடற்கரை ஆகிய 8 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் கடற்கரைப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல் படுத்தியதற்காகச் சர்வதேச சிறந்த வழிமுறைகள் பிரிவில் இந்தியாவுக்கு மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசு இந்தியக் கடற்கரைகளுக்கும் நீலக் சான்றிதழ் பெறுவதற்கான பணிகளைக் கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாட்டில் இதுபோன்ற 100 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் பெறத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மற்ற எந்த நாடுகளுக்கும் கிடைக்காத வகையில் ஒரே முயற்சியில் 8 கடற்கரைகளுக்குச் சர்வதேச விருது கிடைத்திருப்பது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நீடித்த மேலாண்மைக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் எனத் தெரிவித்துள்ளார்.ஆனால் இந்த விருது பட்டியலில் தமிழகம், புதுச்சேரி கடற்கரைகள் இடம் பெறவில்லை . தென் மாநிலங்களில் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த கடற்கரைகளுக்கு மட்டுமே நீலக் கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது .

மத்திய அரசு நீலக் கொடி சான்றிதழ் பெறுவதற்கான திட்டத்தின் முதல்கட்டமாக போகவே (மகாராஷ்டிரா), கோவளம் (தமிழ்நாடு), ஈடன் (புதுச்சேரி), மீராமர் (கோவா) மற்றும் பங்கரம் (லட்சத்தீவு) உள்ளிட்ட 13 கடற்கரைகளைத் தேர்வு செய்தது.ஆனால் இந்த கடற்கரைகளை இந்திய வல்லுநர்கள் ஆய்வு செய்த போது நீலக் கொடி சான்றிதழ் பெறுவதற்கான அளவுகோள்களில் ஒரு சில அம்சங்களை இந்த கடற்கரைகள் பூர்த்தி செய்யவில்லை . இதனால் இந்த கடற்கரையின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை.

More News >>