பீகார் முதல் கட்ட தேர்தலில் 52 ஆயிரம் தபால் ஓட்டு.. தில்லுமுல்லு நடக்குமா?

பீகார் சட்டசபைக்கான முதல் கட்டத் தேர்தலில் 71 தொகுதிகளில் 52 ஆயிரம் பேர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் தில்லுமுல்லு நடக்குமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

ஆனால், கொரோனா பரவல் இன்னும் நீடிப்பதால், சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லைபீகாரில் 3 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கடந்த செப்.25ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தபால் ஓட்டுகளை அனுமதிக்கத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 71 சட்டசபைத் தொகுதிகளில் 52 ஆயிரம் பேர் தபால் ஓட்டுப் போடுவதற்கு அனுமதித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த தொகுதிகளில் 4 லட்சம் பேரைத் தேர்தல் அதிகாரிகள் அணுகியதாகவும், அவர்களில் 52 ஆயிரம் பேரைத் தவிர மற்றவர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க விரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 கட்டத் தேர்தல்களில் 12 லட்சம் பேரை அணுகி தபால் ஓட்டு விருப்பம் கேட்கவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

முன்பெல்லாம் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு அனுமதிக்கப்படும். அது ஓரிரு சதவீதம் அளவுக்குத்தான் இருக்கும். அதில் தில்லுமுல்லு நடந்தாலும் வெற்றி தோல்வியில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது. இப்போது பல லட்சம் பேர் தபால் வாக்குகள் போடுவதால் இதில் பாஜக அரசு தில்லுமுல்லு செய்யப் போகிறதோ என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. அதே சமயம், தபால் வாக்குச் சீட்டை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை, ரகசியம் காத்தல், வீடியோ எடுத்தல் மற்றும் பாதுகாப்பான முறையில் தபால் ஓட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் தனியார் லாட்ஜ், ஓட்டல்களில் ஏராளமான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஒரு வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதாகி விட்டால், அதை மாற்றுவதற்கு இந்த கூடுதல் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவற்றை அரசு கட்டிடங்களில் வைக்காமல் ஏன் தனியார் ஓட்டல்களில் வைத்தனர் என்பது புதிராக இருந்தது. அந்த தேர்தலில் நாடு முழுவதுமே தில்லுமுல்லு நடந்ததாகவும், தேர்தல் இயந்திர மென்பொருளில் ஊடுருவி முறைகேடுகள் நடந்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

More News >>