விஷ ஊசி போட்டு புதைக்கப்பட்ட நாய் உயிருடன் மீண்டு வந்தது எப்படி?
ரஷ்யாவில் விஷ ஊசி போட்டு புதைக்கப்பட்ட ஒரு நாய், குழியிலிருந்து மண்ணை அகற்றி மீண்டும் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
நாய், பூனை உட்பட செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அது ஆரோக்கியமாக இருக்கும் வரை மட்டும் தான் கொஞ்சி விளையாடுவார்கள். அதற்கு வயதாகி விட்டால் எங்காவது கண்காணாத இடத்தில் கொண்டுபோய் விடுவதோ கொன்று விடுவதோ உண்டு. இப்படி ரஷ்யாவை சேர்ந்த ஒருவர், தன் வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்க்கு வயதாகிவிட்டதால் அதை விஷ ஊசி போட்டு கொல்ல முடிவு செய்தார். இதன்படி அந்த நாய்க்கு விஷ ஊசி போட்டு விட்டு வீட்டிலிருந்து சிறிது தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் குழி தோண்டி புதைத்த பின்னர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் அந்த நாய் புதைக்கப்பட்ட குழியிலிருந்து மண்ணைத் தோண்டி வெளியே வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. வழியில் மிகவும் களைப்படைந்து சாலையோரத்தில் கிடந்த நாயைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பரிதாபப்பட்டு அதை கென்ட் சிட்டி என்ற விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்தார்.
ஜெர்மன் ஷெப்பர்ட் ரகத்தை சேர்ந்த அந்த நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து உடல் நலம் தேறியது. பின்னர் அந்த நாயை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அந்த நாயின் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. கடைசியில் அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட விலங்குகள் காப்பகத்தினர், நாயை திரும்ப கொண்டு செல்லுமாறு கூறினர். அப்போதுதான் அந்த நாய் அதிர்ஷ்டவசமாக மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய விவரம் தெரியவந்தது. தன்னுடைய நாய்க்கு வயதாகி விட்டதாலும், உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலும் விஷ ஊசி போட்ட பின்னர் ஒரு இடத்தில் குழி தோண்டிப் புதைத்ததாகவும், அது உயிருடன் வந்தது தனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
நாய்க்கு விஷ ஊசி போட்ட பின்னர் அந்த நபர் குழிக்குள் போட்டு விட்டு அது செத்துவிட்டதா என்பதை உறுதி செய்யாமல் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் அந்த நாய் சாகவில்லை. குழியில் இருந்து மண்ணை நீக்கி விட்டு அந்த நாய் வெளியே வந்துள்ளது. இந்நிலையில் அந்த நாய் தனக்குத் தேவையில்லை என்று அதன் உரிமையாளர் கூறிவிட்டார். இதையடுத்து விலங்குகள் காப்பகத்தினரே அந்த அதிசய நாயை வளர்த்து வருகின்றனர்.