இந்தியாவில் 5 வாரமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது..

இந்தியாவில் கடந்த 5 வாரங்களாகப் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளிலும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் 78 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 50 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பட்டு வருகிறது. தினமும் புதிதாக 70, 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக ஒரே நாளில் 93 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், கடந்த 5 வாரங்களாக தொற்று பரவல் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.நேற்று புதிதாக 55,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 71 லட்சத்து 75,881 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 62 லட்சத்து 27,296 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 8 லட்சத்து 38,729 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று மட்டும் 706 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனாவல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9,856 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 வாரங்களாகப் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

More News >>