ஹாத்ராஸ் சிறுமி பலாத்காரம்.. சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை..

ஹாத்ராஸ் நகரில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட பகுதியில் சிபிஐ அதிகாரிகள் இன்று(அக்.13) நேரில் விசாரணை நடத்தினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற ஊரில் கடந்த மாதம் 14ம் தேதி 19 வயது தலித் சிறுமியைக் கும்பல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. மேலும், அந்த கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றது. படுகாயமடைந்த அந்த சிறுமி, டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி கடந்த செப்.29ம் தேதி உயிரிழந்தார். இது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. மேலும், இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனத்தை எழுப்பியது.

இதற்கிடையே, அந்த சிறுமியின் உடலைப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால், போலீசாரே நள்ளிரவில் அந்த சடலத்தை எரித்து விட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் உ.பி. அரசைக் கண்டித்து போராட்டங்களை நடத்தின. மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினர். இந்நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று(அக்.13) காலையில் ஹாத்ராஸ் நகருக்குச் சென்றனர். அங்கு அந்த சிறுமியின் சகோதரரை அழைத்துக் கொண்டு போய் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் அந்தப் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சிறுமியின் பெற்றோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால், மாவட்ட சுகாதார அதிகாரி தலைமையில் மருத்துவர்கள் அங்குச் சென்று பார்த்தனர். உடல்நலம் குன்றியிருந்த தந்தை, மருத்துவமனைக்கு வரமறுத்து விட்டார். அதனால், அங்கேயே மருத்துவ உதவிகளைச் செய்து விட்டு, தாயை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

More News >>