கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு ..!
கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சினிமா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக ஸ்வராஜ் வெஞ்சாரமூடும், நடிகையாகக் கனி குஸ்ருதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கேரள அரசின் கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இது கேரள அரசின் 50 வது ஆண்டு விருதுகளாகும். கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் ஏ.கே. பாலன் விருதுகளைத் திருவனந்தபுரத்தில் அறிவித்தார்.
இதன்படி சிறந்த நடிகராக 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' மற்றும் 'விக்ருதி' ஆகிய படங்களில் நடித்த ஸ்வராஜ் வெஞ்சாரமூடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக 'பிரியாணி' என்ற படத்தில் நடித்த கனி குஸ்ருதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மற்ற கலைஞர்கள் விவரம் வருமாறு: சிறந்த படம்- வாசந்தி, சிறந்த இயக்குனர்- லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, படம் ஜல்லிக்கட்டு, சிறந்த குணச்சித்திர நடிகர்-பகத் பாசில், படம் கும்பளங்கி நைட்ஸ், சிறந்த குணச்சித்திர நடிகை- சுவாசிகா, படம் வாசந்தி, சிறந்த இசை அமைப்பாளர்-சுஷின் ஷியாம், படம் கும்பளங்கி நைட்ஸ், சிறந்த பாடகர்- நஜீம் அர்ஷாத், படம் கும்பளங்கி நைட்ஸ், சிறந்த பாடகி -மதுஸ்ரீ நாராயணன், படம் கோளாம்பி. சிறந்த பொழுதுபோக்கு படமாக கும்பளங்கி நைட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மூத்தோன் என்ற படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் நிவின் பாலிக்கும், ஹெலன் என்ற படத்தில் நடித்த நடிகை அன்னா பென்னுக்கும், தொட்டப்பன் என்ற படத்தில் நடித்த பிரியங்கா கிருஷ்ணாவுக்கும் சிறந்த ஜூரி விருது கிடைத்துள்ளது.கேரள அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் தான் சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்படும்.
ஆனால் கொரோனா காரணமாக 7 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. விருதுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பாலன் தெரிவித்தார். விருதுக்கான போட்டியில் 119 படங்கள் கலந்து கொண்டன. பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான மது அம்பாட்டின் தலைமையிலான ஜூரி குழுவினர் தான் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்தனர்.