தென்காசியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்...!

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தென்காசி ஆட்சியர் அலுவலகம் எதிரே தியா கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தூக்குக் கயிற்றில் தொங்குவது போல நடித்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூரில் உள்ள தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 24 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இரண்டு ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை. இந்த தொகை கிடைக்கும் வரை போராடுவது என அய்யாக்கண்ணு தலைமையில் திங்கட்கிழமை காலை ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் ஒன்று திரண்டனர்.

இரண்டு முறை ஆட்சியர் தரப்பிலும் இரண்டு முறை மற்ற அதிகாரிகள் தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.எனவே விவசாயிகள் நேற்று இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தைத் தொடர்கின்றனர். இரண்டாவது நாளான இன்று விவசாயிகள் சட்டையைக் கழட்டிவிட்டுதூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரும்பு விவசாயிகளுக்கு 14 நாட்களுக்குள் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அந்த ஆலையை ஜப்தி செய்யலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால் தென்காசி மாவட்ட ஆட்சியர் இதுவரை அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. எனவேதான் இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.நிலுவைத் தொகையை வழங்கும் வரை போராட்டத்தைக் கைவிடாமல் இங்கேயே இருப்பது என்று முடிவு செய்து உள்ளோம் இன்று சட்டை இல்லாமல் போராடும் நாங்கள் நாளை முழு நிர்வாணத்துடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

அடுத்த நாளும் போராட்டம் தொடருமாயின் பாம்பு, எலிகளைப் பிடித்து உண்ணும் போராட்டம் நடக்கும் என்றும் அய்யாகண்ணு தெரிவித்தார்.போராட்டம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

More News >>