வீட்டு கடனுக்கு வட்டி இனி குறையும்...?
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.பெரிய அளவிலான வீட்டுக் கடன்களை வழங்க வங்கிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது ,இதன் காரணமாக வட்டி விகிதங்கள் குறையும் சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது. தற்போது, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடன் தொகையின் அளவுடன் இணைக்கப்பட்டுள்ளன.30 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மிகக் குறைவு. கடனின் அளவு அதிகமானால் வட்டி விகிதமும் உயரும்.
ஸ்டேட் வங்கியில் ரூ.30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு 7 சதவீத வட்டியும் 30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 7.25 சதவீத வட்டியும் வசூலிக்கப்படுகிறது. 75 லட்ச ரூபாய்க்கு மேலான வீட்டுக் கடனுக்கான வட்டி 7.35 சதவீதமாகும் .பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களைப் பராமரிக்க நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தில் 100 சதவீதம் வங்கிக்குத் தேவை. ஆனால் இதற்கு மாறாகக் கடன் வழங்குநர்கள் வீட்டுக் கடன்களுக்குக் குறைந்த மூலதனத்தைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவை பாதுகாப்பாகக் கருதப்படுகின்றன.
கடன் அளவைத் தவிர, மூலதனத் தேவைகள் சொத்தின் மதிப்புடன் ஒப்பிடுகையில் கடன் தொகையைப் பொறுத்து உள்ளது. இது கடனுக்கு மதிப்பு (எல்டிவி) என்றும் அழைக்கப்படுகிறது.ஒரு வீட்டின் உரிமையாளர் 20 சதவீத சொத்து மதிப்பைத் தானே பங்களித்து மீதம் 80 சதவீத தொகைக்குக் கடன் வாங்கினால், வங்கியின் மூலதனத் தேவை குறைவாகவே இருக்கும். இதான் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விகிதங்களின் படி வட்டி வழங்க வழி செய்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடன் கொள்கை குறித்த அறிவிப்புகளில், 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வங்கிகளுக்கான மூலதன தேவைகள் கடனுக்கான மதிப்பு அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படும். கடனின் அளவை பொறுத்து அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவிலான வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது.