சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டாக்டர் கைது...!
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணை அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில் டாக்டரான பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலி பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி (44). இவர் அப்பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இவர் பாதிரியாரான போதிலும் ஆயுர்வேதம் படித்த ஒரு டாக்டர் ஆவார். அடிமாலி அருகே உள்ள கல்லார்குட்டி என்ற இடத்தில் பாலக்காடன் ஆயுர்வேத வைத்தியசாலை என்ற பெயரில் சொந்தமாக ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
சர்ச்சில் பிரார்த்தனை சமயங்கள் தவிர மற்ற நேரத்தில் மருத்துவமனையில் இவர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார். சிகிச்சைக்குக் குறைந்த கட்டணமே வாங்குவதால் பாதிரியார் ரெஜியின் மருத்துவமனைக்குத் தினமும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் செல்வது உண்டு. பணம் இல்லை என்று நோயாளி கூறினால் அவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிப்பார்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தனது தாயுடன் ஹார்மோன் சிகிச்சைக்காகப் பாதிரியார் ரெஜியின் மருத்துவமனைக்குச் சென்றார். அந்த இளம்பெண்ணைப் பரிசோதித்த அவர், கூடுதல் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறி வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த அறையில் வைத்து பாதிரியார் ரெஜி, அந்த இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இதையடுத்து அந்த இளம்பெண் கூக்குரலிட்டு வெளியே ஓடினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த இளம்பெண் அடிமாலி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியார் ரெஜியை கைது செய்தனர்.