கேரளாவில் சினிமா தியேட்டர்கள் இப்போதைக்கு திறப்பு இல்லை..!

அக்டோபர் 15 முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அளித்துள்ள போதிலும் கேரளாவில் நோய் பரவல் அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று நடந்த சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் கேரள சினிமா வளர்ச்சிக் கழக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் 5வது கட்ட ஊரடங்கு நிபந்தனை தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி சினிமா தியேட்டர்கள் உள்பட பொழுதுபோக்கு மையங்களை அக்டோபர் 15 முதல் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுக் கிடந்ததால் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கேரளாவில் சினிமா தியேட்டர்களை திறக்கலாமா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் கேரள சினிமா வளர்ச்சிக் கழகம் சார்பில் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் பிலிம் சேம்பர் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகளவில் இருப்பதால் தற்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க முடியாது என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். குறைந்தது ஒரு மாதத்திற்குப் பின்னரே தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசிக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

தியேட்டர்களை திறந்தால் கூட சினிமா பார்ப்பதற்கு ஆட்கள் வருவார்களா என்பது சந்தேகமே. எனவே இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க எந்த வாய்ப்பும் இல்லை. மேலும் தியேட்டர்கள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்டு இருப்பதால் சினிமா துறை பெரும் இக்கட்டான நிலையில் உள்ளது. இதைச் சமாளிக்க அரசு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை என்று தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

More News >>