குடிபோதையில் காருக்குள் படுத்து தூங்கியவர் மரணம் என்ன காரணம்?
நொய்டாவில் குடிபோதையில் காரில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார். என்ஜினில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவைச் சுவாசித்ததால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.காரில் ஏசியை ஆன் செய்து விட்டு நீண்ட நேரம் இருப்பது ஆபத்து என்று பொதுவாகக் கூறப்படுகிறது. என்ஜினில் ஏதாவது கோளாறு இருந்தால் அதிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு வாயுவைச் சுவாசித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நொய்டாவில் ஒரு வாலிபர் குடிபோதையில் இரவு முழுவதும் காரில் ஏசியை ஆன் செய்துவிட்டுத் தூங்கினார். மறுநாள் காலை அவர் உயிரிழந்தார்.நொய்டாவைச் சேர்ந்த சுந்தர் பண்டிட் என்ற அந்த வாலிபர் கடந்த இரு தினங்களுக்கு முன் இரவில் வழக்கம்போல பணி முடிந்து காரில் வீட்டுக்குச் சென்றார். காரில் வைத்து நன்றாக மது அருந்திய அவர், குடிபோதையில் காருக்குள்ளேயே தூங்கிவிட்டார். இதை யாரும் கவனிக்கவில்லை. மறுநாள் காலை சுந்தரின் வீட்டினர் வந்து பார்த்தபோது காரில் சுந்தர் தூங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
பலமுறை கதவைத் தட்டியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து கார் கண்ணாடியை உடைத்துத் திறந்து பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து நொய்டா போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது மரணத்தில் மர்மம் எதுவுமில்லை என்றும், நீண்ட நேரம் காருக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டுத் தூங்கியதால் என்ஜினில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்தால் அவர் மரணமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.