பறிக்கப்பட்டதை மீட்போம்.. விடுதலைக்கு பின் மெகபூபா ஆவேசப் பேச்சு..

ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமாக நம்மிடம் மத்திய அரசு பறித்ததை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநிலத்தில் விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தி சயீத் ஆவேசமாகப் பேசியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்படப் பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும், மொபைல் மற்றும் தொலைப்பேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஓராண்டு முடிவுற்றும் இது வரை அங்கு மாமூல் நிலை திரும்பவில்லை. முப்தி முகமது சயீத் உள்படப் பலர் இன்னும் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மகள் இல்திஜா, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். காஷ்மீரில் பல தலைவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தனது தாயையும் விடுதலை செய்ய வேண்டுமென்று அவர் கோரியுள்ளார். இந்த மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதாக இருந்தது.

இந்நிலையில், மெகபூபா முப்தியை நேற்று ஜம்மு காஷ்மீர் அரசு விடுதலை செய்தது. 14 மாதங்கள், 8 நாட்கள் சிறைக்காவலிலிருந்து தற்போது விடுதலை ஆகியுள்ள மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ஆடியோ வெளியிட்டார். ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது:ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களிடம் பறிக்கப்பட்டதையும், பெற்ற அவமானங்களையும் மறக்கவே மாட்டார்கள். ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமாக நம்மிடம் மத்திய அரசு பறித்ததையும் நாம் மீட்டெடுக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சனைக்காக ஆயிரக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்ததை மறக்க முடியாது. நாம் செல்லும் பாதை எளிதானதல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், நம்மிடம் அதற்கான மன உறுதியும், உத்வேகமும் இருப்பதை நான் நம்புகிறேன்.

இவ்வாறு பேசியுள்ளார்.

More News >>