தகவல் திருட்டு வழக்கு... கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் சோதனை நடத்த உத்தரவு!
தகவல் திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை முழுமையாக சோதனை நடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை 200 கோடிக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். அதில், படங்கள், வீடியோக்கள், கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்பட்டு வரும், ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனம் ஏறத்தாழ 5 கோடி பேரின் ஃபேஸ்புக் தகவல்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிறுவனம், தேர்தல் தகவல்கள் மற்றும் தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனமாகும்.
இவ்வாறான தகவல் திருட்டு, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, உலக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக தகவல் திருடிய ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த லண்டன் தகவல் ஆணையர், அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை முழு சோதனையிட லண்டன் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தகவல் திருட்டு தொடர்பான முழு விபரத்தையும் மார்ச் 27-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com