விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதம் ஆவது ஏன்?

70க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகிறது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம் தீட்டப்பட்டது. இந்தியாவின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் இது, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் (2022) நிறைவேற்றத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு 10 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் டிசம்பர் மாதம் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்த திட்டம் மேலும் ஒரு வருடத்திற்குத் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணிபுரிந்து வரும் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தான் இதற்குக் காரணமாகும்.தற்போதைய இந்த சூழ்நிலையில் முன்னர் திட்டமிட்டபடி அடுத்த வருடம் ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் மாநாட்டில் ஆன்லைன் மூலம் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், கொரோனா காரணமாக இஸ்ரோ சார்பில் ஏற்கனவே திட்டமிட்டபடி செயற்கைக் கோள்களை ஏவ முடியவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இப்பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது சூழ்நிலை மாறி வருவதால் விரைவில் ராக்கெட்டுகளை ஏவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிஎஸ்எல்வி சி49 ராக்கெட்டில் ரிசார்ட் 2 பி ஆர் 2 செயற்கைக்கோள் ஏவப்படும். இந்த ராக்கெட்டில் சில வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி செய்கின்றன. நம்முடைய விண்வெளி ஆராய்ச்சிக்காக 50 நாடுகளுடன் 250 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ககன்யான் திட்டம் தாமதமடையும் என்றாலும், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

More News >>