இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் போலி டாக்டரா?

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த 22 வயதான இளம்பெண்ணை தன்னுடைய அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் போலி டாக்டராக இருக்கலாம் என்று போலீசுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது அடிமாலி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி பாலக்காடன் (55). இவர் அங்குள்ள பணிக்கன் குடி ஜேக்கோபைட் சிரியன் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். பாதிரியாராக இருந்த போதிலும் இவர் ஆயுர்வேத டாக்டர் என்று அப்பகுதியில் கூறிவந்தார். அங்கு பாலக்காடன் ஆயுர்வேத மையம் என்ற பெயரில் ஒரு மருத்துவமனையும் நடத்தி வந்தார். குறைந்த கட்டணம் என்பதால் இந்த மருத்துவமனைக்குத் தினமும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்குச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒரு இளம்பெண் தன்னுடைய தாயுடன் பாதிரியார் ரெஜியின் ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு ஹார்மோன் குறைபாடு இருந்தால் அதற்கான சிகிச்சை பெறுவதற்காகச் சென்றிருந்தார். அவரை பரிசோதித்த பாதிரியார் ரெஜி, கூடுதல் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறி, தாயை வெளியே அமர வைத்து விட்டு அந்த இளம்பெண்ணை அவர் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.அந்த அறையில் வைத்து இளம்பெண்ணைப் பாதிரியார் ரெஜி பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அலறியடித்து வெளியே ஓடிவந்த இந்த இளம்பெண், தன்னை பாதிரியார் பலாத்காரம் செய்ய முயற்சித்த விவரத்தைத் தாயிடம் கூறினார். இதையடுத்து இருவரும் அடிமாலி போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கூறினர். போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியார் ரெஜியை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் பாதிரியார் ரெஜி உண்மையிலேயே ஆயுர்வேத டாக்டர் தானா என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து அடிமாலி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில் ஜார்ஜ் கூறுகையில், பாதிரியார் ரெஜி கடந்த சில வருடங்களாக அடிமாலி பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வருகிறார். ஆனால் அவர் இதுவரை முறைப்படி டாக்டராக பதிவு எதுவும் செய்யவில்லை. இதனால் அவர் டாக்டருக்கு படித்துள்ளாரா என்பது குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளோம். அவரது கல்வி சான்றிதழையும் பரிசோதிக்கத் தீர்மானித்துள்ளோம். அதன் பிறகு தான் அவர் உண்மையான டாக்டர் தானா எனத் தெரியவரும் என்று கூறினார்.

More News >>