திமுக தேர்தல் அறிக்கை குழு முதல்கட்ட ஆலோசனை.
திமுக தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல்கட்ட ஆலோசனை கூட்டம் இன்று(அக்.14) சென்னையில் நடைபெற்றது. இதில், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் மோதல் ஏற்பட்டு, ஒரு வழியாக எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக அறிவித்து விட்டனர். தி.மு.க.வில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசித்து வருகிறார். மேலும், அதிமுகவில் இருந்து வந்த முக்கிய நபர்களுக்கும் பதவி கொடுக்கும் வகையில், மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளையும் அறிவித்திருக்கிறார். மேலும், சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளைக் கொண்டு தேர்தல் அறிக்கை குழுவை அமைத்துள்ளார். தி.மு.க. சார்பில் குழு அமைப்பதற்கான இந்த குழுவில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், முந்தைய திமுக ஆட்சிகளின் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களின் நலன் மற்றும் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் குறித்தும் அவர்களிடம் ஆலோசித்து அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.