தனிஷ்க் ஜுவல்லரி மீது கும்பல் திடீர் தாக்குதல்.. குஜராத்தில் பரபரப்பு.
தனிஷ்க் ஜுவல்லரி கடை தனது சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பின்பும், குஜராத்தில் அந்த கடை மீது மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. பிரபல டாடா தொழில் குழுமத்தின் ஒரு அங்கம் தனிஷ்க் ஜுவல்லரி. இந்த தங்க நகைக்கடைக்கு சமீபத்தில் ஒரு வீடியோ விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் குஜராத் மாநிலம், குட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து இளம் பெண், முஸ்லிம் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்வது போல் காட்சியும், வசனமும் அமைக்கப்பட்டிருந்தது.
இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், சமூக ஊடகங்களில் இந்த விளம்பரத்திற்கு எதிராகவும், தனிஷ்க் நிறுவனத்திற்கு எதிராகவும் கடுமையான பதிவுகள் வெளியாயின. அதே சமயம், இந்தியாவின் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த விளம்பரம் உள்ளதாக ஆதரவு குரல்களும் ஒலித்தன. திவ்யா தத் இந்த விளம்பரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். பலத்த எதிர்ப்புக்கிடையே விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக தனிஷ்க் நிறுவனம் அறிவித்தது. மேலும் குட்ச் மாவட்டத்தில் காந்திதாம் பகுதியில் உள்ள தனிஷ்க் கடைக்குள் நேற்றிரவு மர்மக் கும்பல் நுழைந்து, அங்கிருந்த மேலாளரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியிருக்கிறது. இதன்பின், மர்மக் கும்பல் கடையை கடுமையாக தாக்கி விட்டு சென்றுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.