அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களிடம் ஜோபிடனுக்கு ஆதரவு அதிகரிப்பு.. கருத்து கணிப்பில் தகவல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு இந்தியர்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. டிரம்ப்பை விட அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அந்த நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் நேருக்கு நேராக விவாதிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதிபர் வேட்பாளர்களின் முதல் விவாத நிகழ்ச்சி கடந்த செப்.29ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, துணை அதிபர் வேட்பாளர்கள் கடந்த 7ம் தேதி நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்தியாவில் பிரதமராக மோடி பொறுப்பேற்றதற்குப் பின், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். இதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் டிரம்ப்புக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், சமீப காலமாக இந்தியாவில் மோடிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்து விட்டது. அதே போல், ஹைட்ராக்சி குளோகுயின் மருந்து கேட்டு அதிபர் டிரம்ப், இந்தியாவை மிரட்டும் விதத்தில் நடந்த கொண்டது, எச்1பி விசா கெடுபிடி போன்றவற்றால், இந்திய அமெரிக்கர்களிடையே டிரம்ப்பின் செல்வாக்கு சரிந்து விட்டது.
இந்த சூழலில், ஜான் கோப்ஹின்ஸ் ஸ்கூல் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ், கார்னேஜி அறக்கட்டளை மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இணைந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் ஒரு சர்வே நடத்தின. இந்த கருத்துக் கணிப்பில் இந்தியர்களிடம் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகமாகியிருப்பது தெரிய வந்துள்ளது.இதன்படி, வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள இந்தியர்களில் 72 சதவீதம் பேர் ஜோ பிடனுக்கு ஆதரவாகவும், 22 சதவீதம் பேர் டிரம்ப்புக்கு ஆதரவாகவும் உள்ளனர். இந்திய-அமெரிக்க உறவில் டிரம்ப் அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக 33 சதவீதம் பேரும், அதிருப்தி தெரிவித்து 37 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். 29 சதவீதம் பேர் கருத்துச் சொல்லவில்லை.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதும் கூட ஜோ பிடனுக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.