மிரட்டிய தோனி பயந்த அம்பயர் ஐபிஎல் போட்டியில் புதிய சர்ச்சை

ஹைதராபாத் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் சென்னை பவுலர் வீசிய ஒரு பந்தை வைடு பால் என அறிவிக்க முயன்ற நடுவரை தோனி மிரட்டியதால் வைடு கொடுக்காமல் நடுவர் பயந்து பின் வாங்கியதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.ஐபிஎல் 13 வது சீசனில் சென்னை அணியின் தொடக்கம் அவ்வளவு திருப்தியாக இல்லை. தற்போது 6வது இடத்தில் உள்ள சென்னை அணி, 8 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தற்போது சென்னைக்கு 6 புள்ளிகள் மட்டுமே உள்ளன.

இதனால் ஐதராபாத் அணியுடன் நேற்று நடந்த போட்டியிலும் சென்னை தோல்வி அடைந்திருந்ததால் அந்த அணியின் நிலைமை பரிதாபமாகியிருக்கும். இதனால் நேற்று நடந்த போட்டியில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் தான் சென்னை வீரர்கள் களம் இறங்கினர். ஆனால் முதலில் ஆடிய சென்னையால் 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இது வெற்றி பெறுவதற்குத் தேவையான ரன்கள் இல்லை என்றாலும் போட்டியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் சென்னை வீரர்கள் இருந்தனர். ஹைதராபாத் இன்னிங்சில் கடைசி 2 ஓவர்களில் அவர்களுக்கு வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் 3 பந்துகளில் 11 ரன்களுடன் ரஷீத் கானும், 1 பந்தில் 4 ரன்களுடன் சஹபாஸ் நதீமும் இருந்தனர். கான் சர்மா வீசிய 18-வது ஓவரில் 2-வது பந்தில் நம்பிக்கை ஆட்டக்காரரான கேன் வில்லியம்ஸ் அவுட் ஆனார். 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் உள்பட 15 ரன்களை சேர்த்திருந்த ரஷீத் கானும், நதீமும் களத்தில் இருந்தனர்.

இவர்களுக்கு எதிராக 19-வது ஓவரை வீச வந்தார் ஷார்துல் தாக்கூர். அவர் வீசிய முதல் பந்தில் ரஷீத் கான் 2 ரன்கள் எடுத்தார். 2-வது பந்தை ஸ்டம்பில் இருந்து வெளியே யார்க்காக வீசினார். ஆனால் அது வைடு ஆனது. 3வதும் அதேபோல ஒரு யார்க்கரை தாக்கூர் வீசினார். அதுவும் வைடு ஆனது. அப்போது வைடு பால் என அறிவிப்பதற்காக நடுவர் பால் ரீபல் கைகளை உயர்த்த முயன்றார். உடனே தோனி, அது வைடு கிடையாது என்று சற்று கோபத்துடன் நடுவரிடம் சைகை காண்பித்தார். இதனால் பயந்த நடுவர் பால் ரீபல் பயந்து, வைடுக்காக உயர்த்த முயன்ற தனது கைகளை உடனடியாக தாழ்த்தினார். இதைப்பார்த்த ரஷீத் கான் அதிர்ச்சியடைந்து நடுவரிடம் சென்று அது வைடு பால் என்று முறையிட்டார்.

ஆனால் நடுவர் அதை ஏற்கவில்லை. மைதானத்திற்கு வெளியே இருந்த ஹைதராபாத் கேப்டன் வார்னரும் நடுவரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தார். டிவி ரீப்ளேயிலும் அது வைடு பால் எனத் தெளிவாகத் தெரிந்தது. தோனியின் மிரட்டலுக்குப் பயந்த நடுவர் குறித்துத் தான் தற்போது சமூக இணையங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கூல் கேப்டன் என அழைக்கப்படும் தோனி ஏன் இப்படி ஹாட் ஆனார் என்பது தான் தற்போது சமூகங்களில் ஹாட்டாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

More News >>