தமிழகத்தில் தியேட்டர் திறப்பு பற்றி அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பு..
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் முதல் சினிமா படப்பிடிப்பு வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட வில்லை.
இதையடுத்து தியேட்டர்களை திறக்க மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டு வந்தனர். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி மத்திய அரசு அறிவித்த தளர்வுகளில் வரும் 15-ந் தேதி தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டதுடன் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, தியேட்டருக்கு உள்ளே வரும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும், கைகளைச் சுத்தமாக்கக் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும், நுழைவாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் அறிகுறி பார்த்துக் காய்ச்சல் இல்லாதவர்கள் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை 15ம்தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து அக்டோபர் 15 முதல் பாதி அரங்கு நிரம்பப் படக்காட்சிகளைத் திரையிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள மல்டிபிளக்சில் திரையரங்குகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஏழு மாதங்களுக்குப் பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இதே போன்று உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் உள்ளிட்ட சில நகரங்களிலும் திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதால் அங்கும் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் தமிழகத்தில் திரையரங்கு திறப்பது எப்போது என்றதற்கு, அது குறித்து திங்கட் கிழமை முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். முதல்வர் பழனிசாமியைச் சந்திக்கத் திரையரங்கு உரிமையாளர் சங்கத்துக்கு நேரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.