யானை மீது யோகா கீழே விழுந்த பாபா முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம்
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் யானை மீது யோகா செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாகக் கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.ராம் கிசன் யாதவ், இது தான் பாபா ராம் தேவின் இயற்பெயராகும். இந்திய யோகா குரு என அழைக்கப்படும் பாபா ராம்தேவ், யோகாவில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஆயுர்வேத வியாபாரத்திலும் இறங்கினார். பதஞ்சலி என்ற பெயரில் இவர் தயாரித்து வரும் பொருட்கள் இந்தியச் சந்தையில் பல ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி வருகின்றன. இவரது யோகா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவின் பல்வேறு இடங்களில் பாபா ராம்தேவ் யோகா வகுப்புகள் நடத்தி வருகிறார்.
தன்னை ஒரு துறவி என்று கூறி வந்தாலும் அடிக்கடி அரசியல் சர்ச்சைகளிலும் இவர் சிக்குவது உண்டு. இவர் நடத்தி வந்த ஆசிரமத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய பதஞ்சலி ஆயுர்வேத மருந்து மற்றும் பொருட்களில் இயற்கையான பொருட்கள் மட்டுமே சேர்ப்பதாக அவர் கூறிவருகிறார். ஆனால் இவரது ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக் கழிவுகள் இருந்ததாக சிபிஎம் மக்களைவை உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார். ஆனால் பின்னர் அது அரசு ஆய்வகங்களில் சோதித்துப் பார்த்ததில் அதில் மூலிகைகள் மட்டுமே இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுராவில் உள்ள தனது ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பாபா ராம்தேவ் இன்று பல புதிய யோகா முறைகளைச் செய்து காண்பித்தார். இதன் ஒரு பகுதியாக யானைமீது ஏறி அவர் யோகா செய்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் திடீரென அந்த யானை லேசாக அசைந்ததால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கீழே விழுந்தபோதிலும் எதுவுமே நடக்காதது போலப் பாபா ராம்தேவ் உடனடியாக எழுந்து நின்றார். ஆனாலும் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. யானையில் இருந்து பாபா ராம்தேவ் கீழே விழும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.