ஒன்றரை கிலோ தங்கம் வெள்ளத்தோடு போச்சு நகைக்கடை ஊழியரிடம் விசாரணை.

ஒன்றரை கிலோ தங்கத்தை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்று கூறிய நகைக்கடை ஊழியரிடம் போலீசார் சந்தேகத்தின் பெயரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் ஒரு பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் பிரதீப் குமார் போட்கே என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடைக்கான அலுவலகம் பஷீர் பாக் என்ற இடத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து தான் நகைக்கடைக்கு தேவையான நகைகள் கொண்டு செல்லப்படும். பெரும்பாலும் பிரதீப் குமார் தான் தன்னுடைய ஸ்கூட்டரில் நகைகளை கடைக்கு கொண்டு செல்வார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்கம்போல பிரதீப் குமார் ஒன்றரை கிலோ நகைகளுடன் கடைக்கு புறப்பட்டார். நீண்ட நேரமாக அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் அவரை பல இடங்களில் தேடினார். பல மணி நேரம் கழித்து கடைக்கு வந்த அவர், வரும் வழியில் வெள்ளத்தில் சிக்கி விட்டதாகவும் நகைகள் அடங்கிய பேக் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து உடனடியாக நகைக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பிரதீப் குமார் கூறிய இடத்திற்கு சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் தீவிர விசாரணையில் அப்பகுதியிலுள்ள ஒரு குப்பைக் கிடங்கில் நகை கொண்டு சென்ற பேக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் நகைகள் எதுவும் இல்லை. இதையடுத்து நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். நிச்சயமாக அது திருட்டாகத் தான் இருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர். நகைக்கடை ஊழியர் பிரதீப் குமாரை போலீசார் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த சம்பவத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

More News >>