திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுக்கு தாவூத் இப்ராகிம் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு அதிர்ச்சி தகவல்
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்குப் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகிய மூன்று மத்தியக் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விசாரணையில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இந்த தங்கக் கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமையிலான கும்பலுக்குச் சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக என்ஐஏ ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதையடுத்து இவர்கள் மீது தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான யுஏபிஏ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தங்களுக்கு எந்த தீவிரவாத குழுக்களுடனும் தொடர்பு இல்லை என்று ஸ்வப்னா கும்பல் தெரிவித்த போதிலும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக என்ஐஏ கூறி வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது என்ஐஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிலருக்குச் சர்வதேச தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருக்கிறது. தங்கக் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத குழுக்களுக்குத் தான் செல்கிறது. அந்த பணத்தைத் தான் இந்தியாவில் தீவிரவாத செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தவிர இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கே.டி. ரமீஸ் என்பவருக்குச் சர்வதேச கடத்தல் கும்பல் தலைவனான தாவூத் இப்ராகிமின் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த தாவூத் இப்ராகிம் கும்பல் தான்சானியா நாட்டில் இருந்து தங்கம், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் மற்றும் ரத்தினங்களை பல்வேறு நாடுகளுக்குக் கடத்தி வருகிறது. ரமீஸ் அடிக்கடி தான்சானியாவுக்குச் சென்று வந்த விவரங்கள் கிடைத்துள்ளன. அங்குச் செல்லும் இவர் தாவூத் இப்ராகிம் கும்பலிடம் இருந்து தங்கம் மற்றும் ஆயுதங்களை வாங்கி இந்தியாவுக்குக் கடத்திக் கொண்டு வந்துள்ளார்.
கடந்த வருடம் கொச்சி விமான நிலையம் வழியாக இவர் 13 துப்பாக்கிகளைக் கடத்தியது தெரிய வந்துள்ளது. அந்தத் துப்பாக்கிகள் யாருக்காகக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேருக்கும் எந்த காரணம் கொண்டும் ஜாமீன் வழங்கக்கூடாது. இவர்களுக்குப் பல சர்வதேச தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதால் இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதற்குக் கால தாமதம் ஆகும். இவ்வாறு அவர் வாதிட்டார்.